ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை: வேலூர் ஜெயிலுக்கு உத்தரவு வந்தது; 7 நாளில் நிறைவேற்ற ஏற்பாடு


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி தேர்தல் பிரசாரத்துக்கு வந்தார். அப்போது ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
ராஜீவ் காந்தியை கொலை செய்த விடுதலைப்புலிகள் மற்றும் உதவி செய்தவர்கள் என பலர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு 1992-ம் ஆண்டு பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் 26 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து 1998-ல் பூந்தமல்லி சிறப்புக்கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து 26 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். 1999-ம் ஆண்டு மே மாதம் அந்த அப்பீல் மனுக்கள் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 22 பேரின் தண்டனை குறைக்கப்பட்டது. அதில் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆயுள் தண்டனை கைதிகளாக வேலூர் ஜெயிலில் உள்ளனர்.
இதற்கிடையே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நளினி தனக்கு மகள் இருப்பதால் கருணை காட்ட வேண்டும் என்று மனு அனுப்பினார். முருகன்- நளினி தம்பதிக்கு ஆருத்ரா என்ற மகள் இருக்கிறார். தற்போது அவர் முருகன் உறவினர்கள் அரவணைப்பில் இங்கிலாந்தில் படித்து வருகிறார். தன் மகளுக்காக தனது உயிருக்கு விலக்கு அளிக்க அவர் கோரிக்கை விடுத்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும், நளினிக்கு தண்டனையை குறைக்கலாம் என்று கடிதம் கொடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2000-ம் ஆண்டு நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து அறிவித்தது.
இந்த நிலையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரையும் தூக்கில் போட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் மூவரும் ஜனாதிபதிக்கு கருணை மனுக்கள் அனுப்பினார்கள். அந்த கருணை மனுக்கள் ஜனாதிபதி மாளிகை அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தன.
தற்போது அந்த கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நிராகரித்து விட்டார். கருணை மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். போராட்டங்களும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்த தமிழக தலைமை செயலாளருக்கு ஆணை ஒன்று வந்துள்ளது. அதில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டணையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆணை தமிழக சிறைதுறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து வேலூர் ஜெயில் சூப்பிரண்டு அறிவுடை நம்பிக்கு தூக்கு தண்டணையை நிறைவேற்றுவதற்கான உத்தரவு நகல் அனுப்பி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அலுவலக உத்தரவு நகல் வந்த 7 நாட்களுக்குள் வேலூர் ஜெயிலில் தூக்கு தண்டணை நிறைவேற்றப்படும் என்று சிறைதுறை ஏடி.ஜி.பி. டோக்ரா கூறியுள்ளார். அதன்படி இன்று முதல் 7 நாட்களுக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஜெயிலில் ஏற்பாடுகள் நடக்கிறது.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|