முடிவு காணப்பட்ட முரண்பாடுகள்! சிறப்பாக நடைபெற இருக்கும் மாவீர் தினம்.


கனடாவிலுள்ள, மாவீரர்நாள் ஏற்பாட்டாளர்கள் தேசியத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும், மாவீரர்களை உண்மையாக நேசிப்பவர்களாகவும் இருந்தமையால் தான், விட்டுக்கொடுப்புடன் பேசி ஒரு ஒற்றுமையை கண்டுள்ளார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் குடும்பங்கள் முன்னாள், போராளிகள் நலன் பேணும் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவீரர் நாளை முன்னெடுப்பது தொடர்பில் கனடா, பிரான்ஸ் , பிரித்தானியா , ஜேர்மனி ஆகிய நாடுகளில் ஏற்பட்டுட்டுள்ள முரண்பாடுகளுக்கு முடிவுக் கொண்டுவரும் நோக்கில் ஒருங்குபட்ட ஏற்பாட்டின் கீழ் பொதுஉடன்பாட்டினை காண்பதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தது.

இந்த முயற்சிகளின் முதற்பயனாக கனடாவில் ஏற்பட்டுள்ள உடன்பாடு குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் குடும்பங்கள் முன்னாள், போராளிகள் நலன் பேணும் அமைச்சகம் 23-11-2011 அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அறிக்கையின் முழுவிபரம் :

தமது தன்னலமற்ற தியாகத்தாலும், உலகமே வியக்கத்தக்க வீரத்தாலும் வரலாற்றுச்சாதனைகள் புரிந்த எமது மாவீரர்களை மையமாகக்கொண்டுதான் ஈழத்தமிழர் மட்டுமல்ல, உலகத்தமிழர்களும், ஒன்றுபட்ட தமிழர்களாகமுடியும். அந்த மாவீரர்களை போற்றும், வணங்கும் மாவீரர் நாளின் பின்னணியிலுள்ள இந்த உண்மையினை மாவீரர் நாள் ஏற்பாட்டாளர்கள் நன்கு உணர்ந்துகொண்டும், விளங்கிக்கொண்டும் மாவீரர் நாளை ஒற்றுமையாக நடாத்த வேண்டும் என்பதே எமது வேண்டுகோள் ஆகும்.

கனடாவில், மாவீரர்நாளினை இரண்டு பிரிவுகளாக நடாத்தவிருந்த இரு அமைப்புகளையும் ஒன்றாக, ஒற்றுமையாக செயற்படவைப்பதற்கான முயற்சிக்கு எமது அமைச்சு தன்னாலான முழு ஆதரவையும் வழங்கி நின்றது. இந்த முயற்சியினை மேற்கொள்ளுவதற்காக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களான திரு. சுரேன் மகேந்திரன், திரு. சியான் சின்னராசா ஆகியோரை எமது அமைச்சின் சார்பாக நியமித்திருந்தோம். இவர்களுக்கு உறுதுணையாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதவிப்பிரதமர் கலாநிதி. ராம் சிவலிங்கம், சபாநாயகர் திரு. பொன் பாலராஜன் ஆகியோரையும் நியமித்திருந்தோம்.

திரு. சுரேன் மகேந்திரன், திரு. சியான் சின்னராசா ஆகியோர் இருதரப்பினரையும் இணைத்து பேச 12-11-2011 அன்று அழைப்புவிடுத்திருந்த அதேவேளை, ரொறன்ரோ புழூஸ் (Toronto Blues) என்ற விளையாட்டுக்கழகம் இரு தரப்பினரையும் இணைத்து பேச எடுத்துக்கொண்ட முயற்சி வெற்றியளித்ததனையிட்டு நாம் பெருமிதமும், பெருமகிழ்ச்சியும் அடைந்துள்ளோம். மேலாக அவர்களுக்கு எமது நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம் இவ்வாறு என அந்த அறிக்கையில் தெரவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|