இலங்கையால் மட்டுமே தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க முடியும்-மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள்.


இலங்கை தமிழர் பிரச்சினைகளை வேறு நாட்டு அரசாங்கங்கள் தலையீடின்றி இலங்கையால் தனியே தீர்த்துக் கொள்ள முடியும் என மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அரசாங்கம் கடந்த காலங்களில் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டதாகவும் அதனை நிவர்த்தி செய்ய சரியான தீர்வு வழிவகுக்கும் எனவும் மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.மனோகரன் மற்றும் எஸ்.ராமகிருஸ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். “இலங்கையால் மாத்திரமே அதன் உள்நாட்டு தமிழர்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியும்” என தனது இந்திய விஜயத்தின் போது மனோகரன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், “மற்றையவர்களுடன் சேர்ந்து நாங்களும் இரண்டாம் நிலை பாத்திரமாகவே செயற்பட முடியும்” என பாராளுமன்ற உறுப்பினர்களான மனோகரனும், ராமகிருஸ்ணனும் குறிப்பிட்டுள்ளனர்.
“இலங்கையில் போர் முடிந்து வெற்றி தோல்வி அறிவிக்கப்பட்டுள்ளது” எனக் கூறிய மனோகரன் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சிறந்த வாழ்க்கை ஒன்றை எதிர்பார்த்துள்ளனர் எனக் கூறினார். “அரசாங்கம் புனர்வாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது மாத்திரமன்றி சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் நிலைநாட்ட வேண்டும். இயல்பு நிலை திரும்ப தேவையான இடங்களை வழங்க வேண்டும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்களான மனோகரன் மற்றும் ராமகிருஸ்ணன் ஆகியோர் கடந்த ஜுன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்து கொழும்பு மற்றும் வடக்கில் உள்ள தமிழர்களை சந்தித்தனர்.
இந்தியா பெரும்பான்மை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதால் சிறந்த தீர்வு ஒன்றை வழங்க அழுத்தம் கொடுக்கும் என நம்புவதாக அந்த மக்கள் தங்களிடம் தெரிவித்ததாக இவர்கள் இருவரும் கூறியிருந்தனர். “எந்தவொரு யுத்தத்திலும் இழப்புகள் ஏற்படுவது வழமைதான்.” எனக் கூறிய மனோகரன், இலங்கை யுத்தத்தில் தமிழர்கள் மாத்திரமன்றி சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். “இலங்கையில் யுத்தம் நிறைவடைந்துள்ளது. ஆனால் இனப்பிரச்சினை இன்னும் தீரவில்லை.” எனக் குறிப்பிட்ட மனோகரன், “விடுதலைப் புலிகளுக்கு தாம் சார்பாக கதைக்கவில்லை.” எனவும் குறிப்பிட்டார்.

நல்லிணக்க விடயங்கள் குறித்து இலங்கை மற்றும் இந்தியாவுடன் இணைந்து செயற்படத் தயார் எனக் கூறிய அவர், இந்தியா மற்றும் இலங்கை சென்றுவந்துள்ளதால் அங்குள்ள நிலைமைகளை தாம் நன்கு அறிந்துள்ளதாகத் தெரிவித்தார்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|