“தேசத்தின் குரல்” பாலா அண்ணா! அரும் பாடமாய் பதிவாகியிருக்கும் ஒரு போராளியின் வாழ்க்கை


விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர், தத்துவாசிரியர் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எம்மை விட்டகன்று ஐந்து ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. ஆனால், அவரது நினைவுகளும் ஆளுமைகளும் எம்மை விட்டு என்றும் அகலா. ஒரு பத்திரிகையாளனாக, பொதுவுடைமைச் சித்ததாந்தவாதியாக, தத்துவாசிரியராக, விடுதலைப் புலிகளின் ஆலோசகராக, தலைமைப் பேச்சாளராக பல பரிமாணங்களை எடுத்தவர் எங்கள் பாலா அண்ணா. எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழ் மக்களினுடைய தேசிய விடுதலைப் போராட்டம் குறித்து, அதன் நியாயப்பாடுகளை சர்வதேச அரங்கில், எடுத்துச் சென்று வாதிட்ட, தமிழர்களின் விடுதலைக்காகப் பாடுபட்ட ஒரு போராளி அவர்.
கொடிய நோய் தன்னைத் தாக்கியிருந்ததையும் பொருட்படுத்தாமல், தன் இறுதி மூச்சு அடங்கும் வரை, எங்கள் தேசத்தின் குரலாக அவர் ஒலித்தார். எங்கள் மக்களின் விடுதலைக்காக அவர் இறுதிவரை உழைத்தார். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில், பாலா அண்ணாவின் வாழ்க்கை ஒரு பாடம். படித்தவர்கள், அறிவுஜீவிகள், உயர்பதவி வகிப்போர், புலம்பெயர்ந்த தேசங்களில் கல்விகற்கும் இளையோர், உயர்நிலைகளை நோக்கி முன்னேறும் இளம் சமூகத்தினர் என எல்லோருக்கும் பாடமாக தன் வாழ்க்கையை வாழ்ந்துகாட்டியிருக்கின்றார் பாலா அண்ணா.
1979ம் ஆண்டு, தமிழகத்தில், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களைச் சந்தித்த நாள் தொடக்கம், தேசியத் தலைவரின் கருத்தோடு ஒன்றிக் கலந்து, இறுவரை தேசியத் தலைவருக்கு ஆதரவாக, அன்புகொண்ட அண்ணனாக, உடன் இருந்து தேசியத்தலைவரின் பணிச் சுமையைத் தானும் பங்கிட்டுக்கொண்டவர். தான் மட்டுமன்றி, தன் வாழ்க்கைத் துணையாக வந்திணைந்த, அவுஸ்திரேலியப் பெண்மணியான அடேல் அம்மையாரையும், எமது விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கும் பெண்மணியாக பங்குவப்படுத்தி, எமக்காக, தம்பதியினராக, அனைத்து இன்ப துன்பங்களையும் எமக்காகப் பங்கிட்டு வாழ்ந்தார்.
மேல்நாட்டு வாழ்க்கையை உதறித்தள்ளிவிட்டு, தாய்நாட்டு விடுதலைக்காக உயிர்கொடுத்துப் போராடும் போராளிகளோடு போராளிகளாக மோசமான ஆபத்துகள் நிறைந்த நெருக்கடியான தாயக வாழ்க்கையை, பாலா அண்ணாவும் அடேல் அம்மையாரும் விருப்புடன் ஏற்றுக்கொண்டு வாழ்ந்த வாழ்க்கை உண்மையில், எமக்கான பெரும் பாடம். எளிமையாக வாழ்ந்தார். உயர்ந்த சிக்கல் நிறைந்த, விளங்கிக்கொள்ள சிரமமான தந்துவங்களை, சித்தாந்தங்களை எளியதமிழில் எமக்கு பரிச்சயப்படுத்தினார்.

உலகத்தின் ஆதரவை எமது பக்கம் திருப்ப அதிகளவில் பாடுபட்டார்.  போராடினார். இன்று அவரது இடம் வெற்றிடமாகவே இருக்கின்றது. புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் இளைய சமூகத்தினருக்கான அழைப்பை பாலா அண்ணாவின் வாழ்க்கை ஏற்படுத்தியிருக்கின்றது. எமது தாயக விடுதலையை நேசிக்கவும், அதற்காக அர்ப்பணிப்பான வாழ்க்கையை வாழவும் பாலா அண்ணாவின் வாழ்க்கை கற்றுத்தருகின்றது. தேசியத்தலைவரின் வேண்டுகோள் புலம்பெயர்ந்த இளைய சமூகத்தை நோக்கியே முன்வைக்கப்பட்டிருக்கின்றது. பாலா அண்ணாவின் வாழ்க்கையை ஒரு அரும்பெரும் பாடமாக ஏற்றுக்கொண்டு, கர்வமற்ற, தன்னடக்கமான, சுயநலமற்ற அர்ப்பணிப்பு மனோபாவத்துடன் தேசப்பணியாற்ற புலம்பெயர் இளைய சமூகம் தன்னைத் தயார்படுத்த வேண்டும். பாலா அண்ணாவின் நினைவு நாளில், இந்த நிலையை எட்ட எம்மைத் தயார்படுத்துவோமாக.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
தமிழர் நடுவம்- பிரான்ஸ்

நன்றி தமிழ்வின்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|