தமிழர்களின் பெருவிழாவில் ஆண்டவனுக்கும் தடையா? சிறிதரன் எம்.பி.


நவம்பர் 27 இல் அனுஷ்டிக்கப்படும் தமிழர்களின் ஒரே ஒரு பெருவிழாவான மாவீரர் தினத்தில் கோயில்களில் மணியடித்துப் பூஜை செய்வதற்கு அந்த ஆண்டவனுக்கே தடைவிதிக்கப்படுகிறது. போரில் மடிந்த வீரர்களுக்கு பூ வைக்க முடியாமல் துயிலும் இல்லங்கள் அடியோடு அழிக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு நாடாளுமன்றில் உணர்வு கொப்பளிக்கத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன். நாடாளுமன்றில் நேற்று வரவு  செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் அங்கு கூறியவை வருமாறு, ஒரே தீவில் இரண்டு தேசிய இனங்கள் வாழுகின்ற போதிலும், அவர்கள் தமக்குரிய அரசியலையும் பொருளாதாரத்தையும் வெவ்வேறு அடிப்படையில் கொண்டுள்ளனர். இந்த உண்மைகளை அனுசரித்து ஏற்கனவே நடந்திருந்தால் இலங்கை பொருளாதாரத்தில் அபிவிருத்தியை எட்டுவதில் எந்தவிதப் பிரச்சினைகளையும் கொண்டிருக்கமாட்டாது.

தமிழ் மக்களை மீட்பதற்கான போர் எனக்கூறி தெருவுக்கு கொண்டுவரப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இன்னும் தெருக்களிலேயே வாழ்கின்றார்கள். அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் பறிக்கப்படுகின்றன; அவர்களுடைய கலாசாரம் சீரழிக்கப்படுகிறது; அவர்களின் மொழியும் அவமதிக்கப்படுகின்றது. இன்று சிறையிலே வாடுகின்ற ஒவ்வொரு தமிழ் இளைஞனின் எதிர்காலமும் நம்பிக்கையீனங்களுடனேயே போகின்றது. அவர்களின் குடும்பங்கள் வாழமுடியாமல் தவிக்கின்றன. போர் முடிந்து கிட்டத்தட்ட 3 வருடங்களை எட்டிப்பிடிக்கும் நிலையில், எத்தனையோ பேர் சிறையிலுள்ளார்கள். எத்தனையோ பேர் காணாமல் போயுள்ளார்கள். எத்தனையோ பேர் சரணடைந்தார்கள். எத்தனையோ பேர் அரசியல் கைதிகளாக உள்ளார்கள்? இதுவரை புனர்வாழ்வு அளிக்கப்படவுள்ளவர்கள் எத்தனைபேர் என்ற உண்மைகள் இன்னும் வெளிவரவில்லை. தங்களுடைய அப்பாவின் வருகைக்காக எத்தனையோ குழந்தைகள் கண்ணீருடன் காத்திருக்கிறார்கள். தங்களுடைய குடும்பத்தாருடன் சேர்ந்து வாழ எத்தனையோ இளைஞர்கள்  ஏங்கிக் கிடக்கிறார்கள். எப்போது விடுதலை பெறுவோம் என்ற பெருமூச்சுடனும்  மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும் வாழ்கிறார்கள்.
ஆசியாவின் ஆச்சரியமாக இந்த நாட்டை மாற்றுவோம் என்று கூறியபடி எல்லா இனமும் இங்கு ஒற்றுமையாக வாழ்கிறார்கள் என்று காட்டமுனையும் அரசு, ஏன் இந்த முன்னாள் போராளிகள் மீது பாரபட்சம் காட்டுகிறது? வெளியேவந்த போராளிகளுக்கு வேலையில்லை; அடிக்கடி இராணுவத் தொந்தரவு; நிம்மதியில்லாத வாழ்க்கை. 

இவை தமிழ் இளைஞர்கள் மத்தியில் பெரும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கெல்லாம் இந்த நாட்டில் எப்போது விடிவு கிடைக்கப்போகிறது? சிறையிலுள்ள சரணடைந்த போராளிகளின் விவரங்களையாவது இந்த ஆசியாவின் ஆச்சரியமான ஜனநாயக நாடு வெளியிடுமா?
வெறும் அபிவிருத்திக் கோஷங்களையும், திறப்புவிழாக்களையும் நடத்துவதால் தமிழினம் நிம்மதியுடன் வாழ்வதாகக் காட்டிக்கொள்ள முடியாது என்ற உண்மை ஊடகங்களுக்கே இப்போது புலப்படத் தொடங்கியுள்ளது. வெள்ளைக்கொடியோடு வந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இன்றுவரை அரசு வெளியிடவில்லை. தமிழர்களின் கலாசார சின்னங்கள் அழிக்கப்பட்டு அவர்களின் பூர்வீக மண்ணின் அடையாளமே இல்லாமல் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. எல்லாளனுடன் போரிட்ட துட்டகைமுனு எல்லாளனுக்கு வணக்கம் தெரிவித்து சமாதி கட்டினான். இது அக்கால சிங்கள மக்களின் உயர்ந்த பண்பாட்டைக் காட்டுகின்றது.

ஆனால், இன்று போரிலே மடிந்த தங்கள் வீரர்களுக்கு பூவைக்க முடியாமல் மாவீரர் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. தமிழர்களின் ஒரேயொரு பெருவிழாவான மாவீரர் தினம் கூட கோயில்களில் மணியடித்து பூஜை செய்வதற்கு  ஆண்டவனுக்கே தடையான நாளாக அறிவிக்கப்படுகிறது. ஓர் இனத்தின் உணர்வுகளைப் புரிந்து, வாழ்வியல் உரிமைகளைப் புரிந்து, அவர்களின் இனத்துவத்தை மதித்து நடக்காதவரைக்கும்  யாரும் நிம்மதியோடு இந்த மண்ணில் வாழமுடியாது என்ற உண்மை வெளிப்பட ஆரம்பித்துள்ளது.ஆறாத காயங்களோடு வாழும் தமிழ் மக்களைப் பார்த்து காயங்களைக் கிளறவேண்டாம் என்று கூறுவதன்மூலம் ஒரு தீர்வை எட்டமுடியுமா? 2006 ஆம் ஆண்டுமுதல் 2007, 2008 ஆம் ஆண்டுகளில் இராணுவப்பிடிக்குள்ளிருந்த யாழ்ப்பாண மண்ணில் காணாமற்போன ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கதி என்ன என்று  இன்னும் வெளிவரவில்லை. தாய் தந்தையருக்கு முன்னால், மனைவிக்கு முன்னால் பகிரங்கமாகக் கடத்திச் செல்லப்பட்டவர்களின் நிலை என்ன? இன்னும் தங்கள் பிள்ளைகளைத் தேடியலையும் இவர்களின் கண்ணீருக்கு இந்த ஜனநாயக நாட்டில் என்ன கிடைக்கப்போகிறது?

கிழக்குத் தீமோரின் வரலாற்றையும், தென் சூடானின் பிரசவத்தையும், எகிப்திலும் லிபியாவிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டிய காலம் வந்துள்ளது. மாவீரர் துயிலும் இல்லங்களும் நினைவுச் சின்னங்களும் அடியோடு அழிக்கப்பட்டாலும் தமிழர் மனங்களில் நினைவுகளை இல்லாமல் செய்யமுடியுமா? கற்களும் செங்கற்களும் மக்களின் குரல்களைக் கொன்றுவிடுமா?  என்றார் சிறிதரன்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|