தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையிலான போரில் களப்பலியடைந்த மாவீரர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கார்த்திகை 27ஆம் நாளில் நினைவு கூர்ந்து வந்தது. அன்றைய தினம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது மாவீரர் தின உரையை ஆற்றி வந்தார். 1990களுக்குப் பின்னர் புலிகளின் செல்வாக்கு உயர்ந்த காலத்தில் அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் பிற பகுதிகளிலும் உலக நாடுகளிலும் இந்த நினைவுநாள் கொண்டாடப்படுகிறது. 2008ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்கும் இடையில் கடுமையான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் புலிகள் இறுதியாக மாவீரர் தினத்தை அனுஷ்டித்திருந்தனர்.
புலிகள் இயக்கத்தின் சிதைவுக்குப் பிறகு இந்த ஆண்டு மூன்றாவது மாவீரர் தினம் வருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கொல்லப்பட்ட சுமார் நாற்பதாயிரம் போராளிகளை இந்த நாள் நினைவுக்கு கொண்டு வருகிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த இருபது வருடங்களாக இந்த நாள் நினைவு கூரப்படுகிறது. வடக்கு கிழக்கில் உள்ள பல லட்சம் மக்களின் உறவுகள் இவ்வாறு கல்லறைகளில் உறங்குகிறார்கள் என்று அந்த மக்கள் அதை நினைவு கொள்ளுகிறார்கள். கடந்த முப்பது வருடங்களில் இலங்கை இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதல்களில் இந்தப் போராளிகள் மாண்டுள்ளார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை மாவீரர் நாளில் நிகழ்த்தப்படுவதால் இந்த நாள் உலகளவில் அரசியல் ரீதியாகவும் கவனத்தை ஏற்படுத்தியிருந்தது.
2009 மே மாத்தின் பின்னரும் அதற்கு முன்பாகவும் விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவத்தினர் அழித்திருந்தனர். அனைத்து அரசியல்களையும் தாண்டி கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இடுகாடு என்ற கண்ணோட்டத்தையும் இழந்து இராணுவத்தினர் இவற்றைச் சிதைத்திருக்கிறார்கள். கல்லறைகளை உடைத்து போராளிகளின் உடல்கள் புதைக்கப்பட்ட நிலத்தை கிண்டி மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்திருந்தமை போருக்குப் பிந்தைய மக்களின் மனங்களில் பெரும் காயத்தை உருவாக்கியிருக்கிறது. விடுதலைப் புலிகளின் நினைவு இடங்களையும் மாவீரர் இல்லங்களையும் இராணுவத்தினர் வேகமாகவும் தீவிரமாகவும் அழித்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் மிகவும் முக்கியம் கொடுக்கப்பட்டு மயானங்களைப் போலல்லாது நினைவு கூரப்பட்ட இந்தப் பகுதி இப்பொழுது தடைசெய்யப்பட்ட பகுதியாக கல்லறைகள் நொருக்கப்பட்ட இடுகாடாக மாறிவிட்டது.
போரில் கொல்லப்பட்ட இந்தப் போராளிகளை பல்லாயிரம் மக்கள் ஈன்றிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாதது. பொதுவாகவே பல தாய்மார்களிடத்தில் தந்தைமாரிடத்தில் சகோதரர்களிடத்தில் உறவுகளிடத்தில் அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் பெரும் தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து துடைத்து விட்டோம் என்று அரசு சொல்லிய பொழுதும் கார்த்திகை மாதத்தில் படையினர் ஒருவிதமான பதற்றத்திற்கு உள்ளாகின்றனர். கொல்லப்ட்ட போராளிகள் புலிகளாக இருந்த பொழுதும் புலிகள் இயக்கம் சிதைக்கப்பட்ட பொழுதும் மக்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதால் கார்த்திகை மாதம் மாவீரர் நாட்காலத்தில் படையினர் தங்களுக்கள் பதற்றம் கொள்ளுகின்றனர்.
மாவீரர் நினைவு நாட்கள் கார்த்திகை மாத்தில் 21 முதல் 27 வரை நினைவு கூரப்படுகிறது. இந்த நாட்களில் படையினர் சிறப்பு நடவடிக்கை ஒன்றிற்கு தயாராகின்றார்கள். மக்களையும் அமைப்புக்களையும் எச்சரிக்கும் விதமாக நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இம்மாத தொடக்கத்தில் இதே காரணத்திற்காகவே புதுக்குடியிருப்புப் பகுதியில் மக்கள்மீது இராணுவத்தினர் எதிர்பாராத தாக்குதல் நடவடிக்கை ஒன்றை மேற் கொண்டனர். பொது இடங்களில் விளக்கு ஏற்றுவதையும் கோயில் மணிகளை ஒலிக்கச் செய்வதையும் தேடித் தேடி தடை செய்கின்றனர். புலிகள் சிதைக்கப்பட்ட நாட்களிலும் மக்கள் மாவீரர் நினைவு நாளைக் கொண்டாடுவார்கள் என்று படையினர் அஞ்சுகின்றனர். 2009 மே மாத்திற்கு முன்பாக மாவீரர் நாள் காலத்தில் கொள்ளும் அதே பதற்றம் இப்பொழுதும் படையினரிடத்தில் ஏற்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக மாவீரர் நாட்க்காலத்தை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழகத்தை படையினர் எச்சரிக்கை விடுத்து வந்திருக்கின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் மாவீரர் நாளைக் கொண்டாடக்கூடும் என்ற சந்தேகத்தில் மாவீரர் நாளுக்கு சில நாட்களின் முன்பாக இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்கள். யாழ்ப்பாணப் பத்திரிகைகளுக்கும் மாவீரர் நாள் குறித்து ஏதும் வெளியிடக் கூடாது என்று அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வருட மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த மர்மநபர்கள் பல்கலைக்கழக பெயர்ப்பலகையில் ஒட்டப்பட்டிருந்த மாவீரர்நாள் சவரொட்டிகளுடன் அந்தப் பெயர்ப்பலகையையும் அடித்து நொருக்கியிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் மாவீரர் நாளை அண்டி வடக்குக் கிழக்குப் பகுதி ஒருவிதமான உணர்வில் அமைதியோடு இருந்தது. அந்த நாளை மறக்க முடியாமல் மக்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த நாளைப் பற்றியும் அதைக் கடந்த காலத்தில் கொண்டாடியது பற்றியும் நினைவு கூர்ந்து கொண்டிருந்தார்கள். தங்கள் பிள்ளைகளின் நினைவாக ஏதும் இல்லாமல் இருக்கும் சூழலில் அவர்களை நினைவு கூரமுடியாது இராணுவத்தின் கண்காணிப்பு மிகுந்த காலத்தில் தங்கள் வீடுகளில் ஏற்றும் விளக்கை, அன்று போரில் கொல்லப்பட்ட தங்கள் பிள்ளைகளுக்காகவும் தங்கள் உறவுகளுக்காகவும் ஏற்றுகிறார்கள்.
செந்தோழன்
நன்றி- குளோபல் தமிழ் செய்திகள்
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment