மனித உரிமைகள் தினத்தையொட்டி காணாமல்போனோரைக் கண்டுபிடித்துத் தருமாறு யாழில் இன்று நடைபெறும் பேரணியின்போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. ஊடகவியலாளர்கள் சிலரும் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போனோரைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரியும் அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுமாறு கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்த மக்கள் இன்று காலை பஸ் நிலையத்தின் முன்பாகக் கூடினர். அவ்வேளையில் பெரும் எண்ணிக்கையிலான பொலிஸாரும் அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் சமுகமளிக்காத காரணத்தினால் பொதுமக்களை அவ்விடத்திலிருந்து கலைந்து செல்லுமாறு பொதுமக்களைப் பொலிஸார் கேட்டுள்ளனர். பொலிஸாரின் கூற்றுக்குச் செவிமடுக்காத பொதுமக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பின்னர் அங்கு வருகை தந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி பொலிஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்துமாறு அவரிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேரணி நடைபெறுவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
‘ஊடகவியலாளர்களுக்கு எச்சரிக்கை’
இன்று காலையில் செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் பஸ் நிலையத்துக்கு அருகில் காத்திருந்தனர். அங்கு ஜீப்பில் வந்த பொலிஸார் புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்களை எச்சரித்ததுடன், படங்களைக் கெமராவிலிருந்து அழிக்குமாறும் கூறிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
நன்றி சரிதம்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment