அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணையே தமிழ் மக்கள் கோருவது – பிரித்தானிய தமிழர் பேரவை.


சிறீலங்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருந்த கற்றுக்கொண்ட பாடங்களும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது.எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே அவ்வறிக்கையில் போர்க்குற்றத்தைப் பற்றியோ அல்லது மனித குலத்திற்கு எதிரான குற்றத்தினை பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதுடன், இது பற்றிய எந்தவித விசாரணையையும் இந்த ஆணைக்குழு நிகழ்த்தவில்லை. மாறாக ஐநா வினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ள ஆதாரங்களை மறுதலிக்கும் வகையில், அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் அநீதி இழைக்கும் வகையிலும், சிறீலங்கா படைகளை போர்க்குற்றத்தில் இருந்து பாதுகாக்கும் வகையிலும், காலத்தினை இழுத்தடிக்கும் நோக்கிலும் இவ்வறிக்கையினை வெளியிட்டிருந்தது

மனித உரிமை கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச்சபை போன்ற உலகின் முன்னணி மனித உரிமை அமைப்புக்கள் கூறியதைப்போலவே இக்கற்றுக்கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணையகத்திடம் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை செய்வதற்கோ அல்லது சாட்சியம் அளித்தவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கோ, போர்க்குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கோ எந்தவித அதிகார வரையறைகளும் இல்லை என்பதுடன், வெறும் கண்துடைப்பு அறிக்கையையே அது வெளியிட்டிருக்கின்றது.

இறுதிக்கட்ட போரில் மருந்தையும் உணவையும் ஆயுதமாக பயன்படுத்தியமை, கனரக ஆயுதங்கள், எறிகணைகள் மூலம் மக்களை கொன்று குவித்தமை, மருத்துவமனைகள் தாக்கப்பட்டதைப் பற்றியோ எதுவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை. பாதுகாப்பு வலயங்கள் எனக் கூறப்பட்ட பகுதிகளில் மக்களை வரவழைத்து அங்கே பாரிய பல்குழல் எறிகணைத்தாக்குதல் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களை கொல்வது, மற்றும் படுகாயங்களுக்கு உள்ளாக்குவது சிறிலங்கா படையினரது மூலோபாயமாக இருந்தது. இதற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் முப்படைகளுக்கும் தளபதியான மகிந்த ராஜபக்சவும், பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் பொறுப்புடையவர்களாக இருப்பதாக அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள சிறிலங்காவின் முன்னாள் படைத்தளபதி ஒருவர் கூறியுள்ளார். அத்துடன், வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான எந்த விடயங்களும் இதில் குறிப்பிடப்படவில்லை.

ஐ.நா வின் செய்மதிப்படங்கள், காணொளிகள் மற்றும் நேரடி வாக்குமூலங்கள் தொடர்பான எந்தவித விடையங்களும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை. மாறாக மேலும் பல விடயங்கள் ஆராயப்படவேண்டும் எனவும், அதற்கு இன்னும் பல ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்து, காலத்தினை இழுத்தடித்து சர்வதேசத்தினை ஏமாற்றும் விதத்தில் பரிந்துரைகளை அது முன் வைத்துள்ளது.

அதே நேரத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய பூர்வீக பிரதேசங்களில் ஆக்கிரமித்துள்ள சிறீலங்கா படைகள், அங்கு படை முகாங்கள் அமைப்பதுடன், தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, கலாசார பண்பாட்டு விழுமியங்களை தொடர்ச்சியாக அழித்தும் தடயங்கள் இல்லாதொழித்தும் வருகின்றன. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை தொடர்ச்சியாக வறுமைகோட்டுக்கு கீழ் வைத்திருப்பதும், அவர்களின் நிரந்தர தொழிலாகிய கடற்றொழில், விவசாயம் செய்யும் இடங்களில் சிங்கள குடியேற்றங்களை நிறுவி, தமிழ் மக்களின் பொருளாதாரத்தினை அபகரித்தும் வருகின்றது. இந்த மக்களின் கருத்து சுதந்திரம் உட்பட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், சிறீலங்கா அரசாங்கம் திறந்தவெளி சிறையில் தமிழ் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றது. இவை அனைத்தையும் எடுத்து நோக்குமிடத்தில், சிங்கள பௌத்த பேரினவாத அரசின் திட்டமிடப்பட்ட இன அழிப்பை சர்வதேச ரீதியாக உருமறைப்புச் செய்து, தமிழ் இன அழிப்பைத் தொடரும் செயற்பாட்டின் ஒரு அங்கமாகவே இவ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்

சிறீலங்கா அரசாங்கத்தின் மீது சர்வதேச சமூகம் இதுவரை மேற்கொண்டுவந்த மென்போக்கான அழுத்தங்கள், தமிழ் மக்களுக்கு எந்தவித மாற்றத்தினையும், கொண்டுவரவில்லை. மாறாக சர்வதேச நியமங்கள் பற்றிய எதுவித கரிசனையும் இன்றி மேலும் தொடர்ச்சியான இனப்படுகொலைகளை தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசாங்கம் நிகழ்த்த இவ்வகையான மென் போக்கான அழுத்தங்கள் துணை நின்றுள்ளன. எனவே அனைத்துலக சமூகம் சிறீலங்கா மீது காட்டும் தொடச்சியான மென்போக்கினை நிறுத்தி, பிரித்தானியப் பிரதமர் முன்மொழிந்ததற்கு அமைவாக, அனைத்துலக சுயாதீன விசாரணைக்கு சிறீலங்கா அரசை உட்படுத்த வேண்டும் என, பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் சார்பில் பிரித்தானிய தமிழர் பேரவை கோரிக்கை விடுக்கின்றது.

நன்றி 
பிரித்தானிய தமிழர் பேரவை.



நன்றி தமிழ்வின்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|