வலைப்பதிவு ஒன்றை (Blogsite) உருவாக்குவது எப்படி? (தொடர்ச்சி...)

வலைப்பதிவு ஒன்றில் காணப்படும் பகுதிகள் எவை?


வலைப்பதிவு ஒன்றை ஆரம்பிக்கும்போது அங்கு காணப்படும் பொதுவான அம்சங்களையும் அவற்றின் பயன்பாடுகளையும் அறிந்திருப்பது சாலப்பொருத்தமானது. பொதுவாக வலைப்பகுதிகளில் பின்வரும் அம்சங்கள் காணப்படலாம்...

  • வலைப்பதிவுத் தலைப்பு
வலைப்பதிவுகள் தமக்கென பெயரொன்றைக் கொண்டிருக்கும். இப்பெயர் வலைப்பதிவின் உள்ளடக்கம் பற்றிய சிறு அறிமுகத்தை வாசகர்களுக்கு சில வேளைகளில் கொடுக்கக்கூடும். பெரும்பாலும் வித்தியாசமான, கவரத்தக்க தலைப்புக்கள் வழங்கப்படுகின்றன.


  • விபரம்
வலைப்பதிவர், தனது வலைப்பதிவு பற்றியோ, அதன் நோக்கங்கள் பற்றியோ விவரிக்கும் ஓரிரு சொற்களை, வரிகளை இது கொண்டிருக்கும். சிலவேளை, விளையாட்டாக, நகைச்சுவைக்காகக்கூட இது எழுதப்பட்டிருக்கும். வலைப்பதிவர் விரும்பும் வாசகமொன்றாகக்கூட இது அமையலாம்.

  • தலைப்பு
ஒவ்வொரு பதிவும் தலைப்பொன்றினைக் கொண்டிருக்கும். வலைப்பதிவுத் திரட்டிகளில் உறுப்பினராக உள்ள வலைப்பதிவர்கள், இத்தலைப்புக்களை மிக கவர்ச்சிகரமாகவும், பதிவின் உள்ளடக்கத்தை ஓரளவுக்கேனும் தெரியப்படுத்தும் விதமாகவும் அமைப்பர்.

  • பதிவு
இதுவே வலைப்பதிவில் அடிக்கடி இற்றைப்படுத்தப்படும் பகுதியாக இருக்கும். இவ்வுள்ளடக்கம் எழுத்தாக்கமாகவோ, ஒலி வடிவமாகவோ, சலனப்படக் காட்சியாகவோ, படமாகவோ அமையலாம். இவ்வுள்ளடக்கம் இணையத்தின் பொதுவான உள்ளடக்கங்களைப் போன்று மீயுரை வடிவங்களுக்கே உரித்தான பல்வேறு சிறப்புக் கூறுகளைக் கொண்டிருக்கலாம்.

  • கருத்துரை
பதிவின் உள்ளடக்கத்தைப் படிக்கும் வாசகர்கள் வலைப்பதிவொன்றில் பதிவுசெய்த கருத்துரைகள் இங்கே காட்சிப்படுத்தப்படும். ஏற்கனவே உள்ள கருத்துரைகளோடு, புதிதாக கருத்துரை இடுவதற்கான தொடுப்பும் அங்கே இருக்கும்.

  • இடுகைகளுக்கான தனிப்பக்கங்கள்
வலைப்பதிவின் முகப்புப் பக்கத்தில் காண்பிக்கப்படும் இடுகைகளை விட, ஒவ்வொரு இடுகைக்கென்றும் தனித்தனிப் பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். அவ்விடுகைகளுக்கான மறுமொழிகளையும் அப்பக்கங்களில் காணலாம். அனைத்துப் பக்கங்களும் தமக்கெனத் தனியான முகவரிகளைக் கொண்டிருக்கும். இப்பக்கங்கள் வலைப்பதிவொன்றின் முகப்பில் தொடுப்பாகச் சேர்க்கப்பட்டிருக்கும். பொதுவாக அண்மையில் எழுதிய பத்து, இருபது இடுகைகளின் தொடுப்புக்கள் தலைப்புக்களோடு முகப்பில் பட்டியலிடப்பட்டிருப்பதை வலைப்பதிவுகளில் காணலாம்.

  • சேமிப்பகம்
வலைப்பதிவு தொடர்ச்சியாக இற்றைப்படுத்தபட்டு வருவதால், முன்னர் எழுதிய பதிவுகள் முகப்புப்பக்கத்தில் இடம்பெறாமலோ, பட்டியலிடப்படும் தனிப்பக்கங்களில் கூட இடம்பிடிக்காமலோ போகலாம். அவற்றை வாசகர்கள் பார்ப்பதற்கும், வலைப்பதிவொன்றின் அத்தனை ஆக்கங்களும் பட்டியலிடப்படுவதற்கும் இத்தகைய சேமிப்பகங்கள் உதவுகின்றன. சேமிப்பகம் ஓர் அவிழ் பட்டியலாகவோ தனிப்பக்கமாகவோ, சாதாரண பட்டியலாகவோ இருக்கலாம். சேமிப்பகத்தில் பதிவுகள் மாதவாரியாகவோ, வார வாரியாகவோ பட்டியற்படுத்தப்பட்டிருக்கலாம். போன்றவற்றை பிரதானமாக குறிப்பிடலாம்.

உங்களது வலைப்பதிவில் முதலாவது பதிவை இடுவது எப்படி?
தொடரும்...

கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் ஐதமிழ்வெப்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|