அலுவலக வேலையின் நடுவே உடற்பயிற்சி; ஊழியர்கள் உற்சாகம்

ஊழியர்கள் அலுவலகங்களில் உற்சாகம் பொங்க வேலை செய்வதற்கு புதிய வழி ஒன்றைக் கண்டு பிடித்துள்ளார்கள். வேறு ஒன்றும் அல்ல அலுவலகத்தில் வேலைக்கு நடுவே கை, கால்களை நீட்டி உடற்பயிற்சி செய்தால் பணிகள் விறுவிறுவென நடக்கிறதாம்.

சோம்பல் இல்லாமல் ஊழியர்கள் உற்சாகமாக வேலை பார்ப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். காலை அல்லது மாலையில் உடற்பயிற்சி செய்வது நல்லது என்று கூறப்படுகிறது.

ஏன்.. பட்டப் பகலில் அலுவலக நேரத்தில், அதன் உள்ளேயே உடற்பயிற்சி செய்தால் என்ன என்று வித்தியாசமாக யோசித்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகம் மற்றும் கரோலின்ஸ்கா மருத்துவ கல்வி நிறுவனம் இணைந்து இந்த ஆராய்ச்சியை நடத்தின. ஆச்சரியமாக இருந்தது..

பல்வேறு அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் இந்த ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் 3 குழுவாக பிரிக்கப்பட்டனர். ‘அலுவலக வேலைக்கு நடுவிலேயே ஒரு நாளைக்கு 2 முறை சின்னச் சின்ன உடற்பயிற்சிகளை செய்யுங்கள். ஒரு வாரத்துக்குள் இரண்டரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்’ என்று முதல் குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டது.

‘முடிந்தால் செய்யுங்கள்’ என்று 2-வது குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. ‘எப்போதும் போல வேலைய பாருங்க’ என்று 3-வது குழுவுக்கு உத்தரவு.

அலுவலக வேலைக்கு நடுவே வாரம் இரண்டரை மணி நேரம் உடற்பயிற்சி செய்தவர்கள் குறைந்த நேரத்திலேயே வேலையை முடித்தது தெரியவந்தது. ‘‘அலுவலகத்தில் ஆடாமல், அசையாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது உடல்நலத்தை பல்வேறு வகையில் பாதிக்கிறது.

அலுவலக நாற்காலியை உடும்பு பிடியாக பிடித்துக் கொண்டிருப்பதே பல்வேறு மூட்டு, தசை பாதிப்புகளுக்கு காரணமாகிறது.

அலுவலகத்தில் நடுநடுவே உடற்பயிற்சி செய்வதால் இந்த பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன. சோர்வு நீங்கி, சுறுசுறுப்பாவதால் பணிகள் விரைவாக முடிகின்றன’’ என்று ஆராய்ச்சியாளர்கள் அல்ரிகா ஷ்வார்ஸ், ஹென்னா ஹாசன் கருத்து தெரிவித்துள்ளனர்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|