குயில்கள் இனிமையாகப் பாடும் என்று தான் நாங்கள் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறோம். “குயிலைப் பிடிச்சு கூண்டில் அடைச்சு பாடச் சொல்கிற உலகம்” என்று பிரபல சினிமாப் பாடலும் உள்ளமை யாவரும் அறிந்ததே.
ஆனால் அவை நீண்ட தூரம் சளைக்காமல் பறக்கும் ஆற்றல் கொண்டவை என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.
குயில்களின் வாழ்க்கை முறை தொடர்பாக பிரித்தானியாவின் பறவையியல் ஆய்வு அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.
ஆய்வுக்காக 5 குயில்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றுக்கு Clement, Martin, Lyster, Kasper , Chris என்று செல்லமாக பெயரும் இடப்பட்டன.
அவற்றின் உடலில் GPS backpacks track எனப்படும் அதிநவீன வழிகாட்டும் கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டன. இதன் மூலம் அவை 3 மாதங்களுக்குள் 5 ஆயிரம் கிலோமீற்றர்கள் தூரம் பயணித்தது தெரியவந்துள்ளது.
இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் மேலும் கூறியதாவது:
GPS கருவிகள் வழிகாட்ட பயன்படுவதோடு பயணிக்கும் தடங்கள், பயண தூரங்களை எளிதிலும் துல்லியமாகவும் கண்டுபிடிக்க உதவும் என்பதால் குயில்களின் உடலில் அவற்றை பொருத்தி ஆய்வு செய்தோம்.
குயில்களின் இயக்கம் முழுவதும் கம்ப்யூட்டர் மூலம் கண்காணிக்கப்பட்டது. இங்கிலாந்தில் இருந்து கடந்த ஜூன் மாதம் கிளம்பிய இவை தற்போது ஆப்பிரிக்காவில் உள்ளது தெரியவந்துள்ளது.
புறப்பட்டு 3 மாதங்கள்கூட நிறைவடையாத நிலையில் இவை 5 ஆயிரம் கிலோமீற்றர்கள் தூரம் பறந்துள்ளன.
குயில்கள் குறைந்த தூரம்தான் பறக்கும் என்ற கருத்தை இந்த ஆய்வு தகர்த்துப் போட்டிருக்கிறது.
இதன் மூலம் குயில்கள் இனிமையாகப் பாடுவதில் மட்டுமல்ல நீண்ட தூரம் பறப்பதிலும் கில்லாடிகள் என்று நிரூபித்து விட்டன.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment