சீன அரசானது இரகசியமாக இந்திய எல்லையில் கட்டிவரும் விமானப்படைத் தளத்தை இந்தியா கண்டு பிடித்து புகைப்படங்களையும் எடுத்துள்ளது. சீன இந்திய எல்லைக் கிராமமான பூக் ஷேயில் சீனா தனது விமானப்படை தளத்தை இரகசியமாக நிர்மானித்துவருகிறது என்ற செய்திகள் ஏற்கனவே இந்தியப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்திருந்தது. இருப்பினும் மலைசார்ந்த இடம் என்பதாலும் மற்றும் அது சீனாவின் எல்லையில் இருப்பதாலும் அதனைப் பார்வையிடுவதில் பல சிரமங்கள் இருந்தது. மலைக்கு பின் புறமாக பாரிய சாலைகளை அமைப்பதிலும் சீனா இரகசியமாக ஈடுபட்டு வருகிறது என்ற செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தது.
இதனைச் செயற்கைக் கோள் உதவியோடு முதலில் கண்டறிந்த இந்திய இராணுவத்தினர் அவ்விடத்தை துல்லியமாக கணக்கிட்டு பின்னர் அதனை எல்லைப் பாதுகாப்பு படையினரிடம் கையளித்துள்ளனர். இந்த வரைபடங்களின் உதவியோடு இந்தியப் படையினர் தற்போது சீனா அமைத்துவரும் விமானப்படை தளத்தை ஒரு மலையின் உச்சியில் இருந்து பார்க்கக்கூடிய இடத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அம் மலையின் உச்சியில் இருந்து தொலைநோக்கு கருவியூடாகப் பார்த்தால் சீனா இரகசியமாக அமைத்துவரும் தளம் தெள்ளத்தெளிவாகப் புலனாகிறது. இதனை அடுத்து இந்தியப் படையினர் இச் செய்தியை தற்போது உறுதிசெய்துள்ளனர்.
சீனாவின் இந்த இரகசிய திட்டம் பற்றி இந்தியா தற்போது கவலையடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. காரணம் பூக் ஷே கிராமமானது இந்திய எல்லையில் இருந்து 20 மைல் தொலைவிற்கும் குறைவான இடத்தில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் இருந்து சீனாவின் வான்படை விமானங்கள் என்நேரமானாலும் புறப்பட்டு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முடியும். அதுவும் இத் தளத்தை சீனா இரகசியமாக நிர்மானித்து வருவதும் மேலும் பல சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. இருப்பினும் இந்தியா விமான எதிர்ப்பு ஏவுகணைத் தளம் ஒன்றை அங்கே நிறுவ அமெரிக்காவின் ஆதரவை நாடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
திபெத்திய ஆண்மீகத் தலைவர் தலே லாமாவை இந்தியா அடைக்கலம் கொடுத்து வைத்திருப்பதும் மற்றும் அவர் அரசியலில் ஈடுபட இந்தியா அனுமதி கொடுத்திருப்பதும் சீனாவை அதி உச்ச கோபமடையச் செய்யும் நிகழ்வாக கருதப்படுகிறது. சீனா திபெத்தை கைப்பற்றி தனது நாட்டின் கீள் கொண்டுவந்தவேளை அங்கிருந்து தப்பி தற்போது திபெத்தின் நாடு கடந்த அரசை வழிநடத்திவரும் தலே லாமாவைக் கொலைசெய்ய சீனா பல தடவைகள் முயன்றதும் யாவரும் அறிந்ததே. இந் நிலையில் தலே லாமாவுக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி-அதிர்வு.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment