பிரான்ஸில் வாழும் தமிழ் இளைஞரான கெவின் வலத்தேசர் (Kevin VALLATHESAR) பாரிஸின் புறநகரான செவி ல றூ chevilly-larue நகரசபையினால் அதி சிறந்த விளையாட்டு வீரனாக மதிப்பளிக்கப்பட்டிருக்கிறார். இது ஈழத்தமிழருக்கு கிடைத்த மற்றுமொரு பெருமையாகும். செவி ல றூ விளையாட்டு வீரர்களை கௌரவப்படுத்தும் மாலை விழா ஒன்று அண்மையில் செவி ல றூவில் இடம்பெற்றபோதே இந்த இளைஞர் கௌரவிக்கப்பட்டார். 2011ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13ம் திகதி பிரான்சின் பிராந்தியங்களுக்கிடையிலான மரதன் (Cross Country) ஓட்டப்போட்டி பரிஸ் புறநகர் பகுதியான பொந்தோ கொம்போவில் ( Pontault-Combault ) நடைபெற்றது.
இதில் வெற்றியீட்டிய கெவினுக்கு 2010- 2011ம் ஆண்டுக்கான விருதும், 2011ம் ஆண்டுக்கான விளையாட்டுத் துறையின் சிறந்த இளம் சாதனையாளர் விருதும் செவி ல றுவா நகர விளையாட்டுத்துறை அதிபர் லுக் வொல்வோடிச் (Luc volvoditch), மேயர், கிறிஸ்ரியன் ஹெர்வே (Christian Hervy) ஆகியோரால் வழங்கப்பட்டது. சகதி நிறைந்து, ஒழுங்கற்றிருந்த கடினமான பாதையில் பலதரப்பட்ட அதிக தொகையிலான போட்டியாளர் மத்தியில் கெவின் வலத்தேசர் ஈட்டிய வெற்றி பிரமிப்பை ஏற்படுத்தியதாக அவரது பயிற்சியாளர் ஒலிவியே சப்பல் (Olivier chapell) வியந்து பாராட்டியுள்ளார். விளையாட்டுத்துறையில் இளையவரான கெவின் தன்னுடன் போட்டியிட்டவர்களே ஆச்சரியப்படும் வகையில் முன்னணியில் ஓடியதுடன், இறுதிவரை தனக்குப் போட்டியாக இருந்த எட்டுப் பேரையும் பின்தள்ளி இலக்கை அடைந்தது வியந்து பாராட்டும் வகையில் அமைந்திருந்ததாகவும் பயிற்சியாளர் ஒலிவியே குறிப்பிட்டுக் கூறினார்.
2010- 11ம் ஆண்டுக்கான இளம் விளையாட்டு வீரராக கெவின் கௌரவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டிருப்பது விசேடமானதும் அதி மேலானதுமான நிகழ்வு என்று ஒலிவியே சப்பல் தமது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார். 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் மாநில வாரியாகவும் இல் டெ பிரான்ஸ் (Ile de Fraance) பரிஸ் பெரும்பகுதி, பிராந்திய வாரியாகவும் கெவின் வெற்றி பெற்று சம்பியனாகியதுடன் பிரான்சின் முன்னைய சம்பியனை விட அதிக இடைத் தூர வித்தியாசத்தில் வெற்;றி பெற்றிருப்பதும் தேசீய ரீதியில் 5வது இடத்தை வகிப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ‘கெவின் வலத்தேசரின் இந்த வெற்றி அடுத்த ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகளிலும் தொடரும் என்ற நம்பிக்கையை எமக்கு ஏற்படுத்தியிருப்பதுடன் பிரான்ஸ் முழுவதற்குமான சம்பியன் போட்டிகளில் கெவின் வலத்தேசர் பங்கு கொள்வதற்குமான வாய்ப்பினை ஏற்படுத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று ஒலிவியே மேலும் குறிப்பிட்டுள்ளார்.
‘கடந்த ஆண்டில் விளையாட்டுத் துறையில் பல சாதனைகளைப் புரிந்த கெவின் மூத்த போட்டியார்களை வெற்றி கொண்டது பற்றி அவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். இனி வரும் விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் வெற்றி வாகை சூட எமது இனிய நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அதற்கான ஆற்றல், வீரம் அனைத்தும் அவருக்குக் கைகூடும் என்ற நம்பிக்கையுடன் முற்கூட்டிய பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் ஒலிவியே வாழ்த்தியுள்ளார்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment