ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் பேச்சு!


போருக்குப் பின்னரான இலங்கையின் நிலவரம், தமிழர்களுக்கான தீர்வு முயற்சிகள், மனித உரிமைகள் உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க கொலம்பிய பல்கலைக்கழகத்தில் விரிவான விளக்கமொன்றை அளித்துள்ளனர்.  கடந்த இரண்டாம் திகதி கொலம்பிய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மனித உரிமை கற்றலுக்கான கற்கை நிலையத்தின் பணிப்பாளர் டேவிட் எல்.பிலிப்ஸ், கொலம்பிய பல்கலைக்கழக தொல்பியல் பீட பேராசிரியர் ஈ.வொலன் ரைன் டானியல் ஆகியோரும் கலந்துகொண்ட இந்த உரையாடலை கொலம்பிய பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகள் கற்கை நிலையமும்,  தெற்காசிய கற்கை நிலையமும் ஏற்பாடு செய்திருந்தன. மாலை 5 மணி முதல் சுமார் ஒன்றரை மணிநேரம் இந்தக் கலந்துரையாடல் நீடித்தது.போருக்குப் பின்னர் அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு இலங்கை அரசு எடுத்துவரும் முயற்சிகள், சிறுபான்மை மக்களுக்கு மொழி மற்றும் இதர அடிப்படை உரிமைகள் குறித்தான இலங்கை அரசின் கவனம் என்பன குறித்து இந்தக் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது.

அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காக அது குறித்தான பேச்சுகளுக்கு இலங்கை அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது என்றும், முடிவுகளை எடுக்கவேண்டியது அரசின் கைகளில்தான் உள்ளது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இங்கு சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்தக் கலந்துரையாடலின்போது பல்வேறு விடயங்கள் குறித்தும்கேள்விகளாகக் கேட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|