ராஜிவ் கொலை வழக்கு: மூவரையும் தூக்கிலிட 8 வாரம் தடை: தூக்கை குறைக்க தமிழக சட்டசபையில் தீர்மானம்!


ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மூவரின் தூக்கை குறைக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி, மூவர் சார்பில் சந்திரசேகர் என்பவர் நேற்று சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதிகள், நாகப்பன் மற்றும் சத்யநாராயணன் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. தூக்கு தண்டனை விதிக்கப்பட் மூவர் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் ராம் ஜெத்மலானி, மோகத் சவுத்ரி மற்றும் காலின் கோன்சாலின் ஆகியோர் வாதாடினர்.
இந்த வழக்கில், ராம் ஜெத்மலானி தமது வாதத்தில், ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணை மனு 11 ஆண்டு மற்றும் 4 மாதம் கழித்து நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு வழக்கில், இரண்டாண்டு காலம் தாமதித்து கருணை மனு நிராகரிக்கப்பட்டதால், தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த தாமதம் தவறானது. இதுகுறித்து விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். ஒரு கைதியை அவரது அறையில் இருந்து தூக்கு மேடைக்கு அழைத்துச்சென்று அவரை தூக்கிலிட 30 விநாடிகள் கூட ஆகாது. அப்படி இருக்கும் போது 11 ஆண்டு காலம் அவர்களை காக்க வைத்தது என்ன நியாயம். எனவே இந்த விஷயத்தில் விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று வாதிட்டார்.
விசாரணையின் முடிவில், இம்மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மூவரின் மனு விபரம்: முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை தொடர்பாக கடந்த 1991ம் ஆண்டு கைது செய்யப்பட்ட நாங்கள், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளோம். எங்களுக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த 1998ம் ஆண்டு ஜனவரி மாதம் பூந்தமல்லி தடா சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது. இதனை கடந்த 1999ம் ஆண்டு மே மாதம் சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது. இதன்பிறகு, தமிழக கவர்னருக்கு நாங்கள் இரண்டு முறை கருணை மனுக்களை அளித்தோம். ஆனால் அவையும் நிராகரிக்கப்பட்டன. இதனையடுத்து, கடந்த 2000மாவது ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி, ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பினோம். ஆனால் அம்மனுக்கள் மீது பல ஆண்டுகளாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. மனுக்கள் மீது உடனடியாக முடிவெடுக்க நினைவுறுத்தி பல முறை கடிதம் எழுதியும், எங்கள் தண்டனை மீது எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், 11 ஆண்டுகளுக்குப்பிறகு, இம்மாதம் 12ம் தேதி, எங்கள் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்து விட்டதாகவும், வரும் செப்.9ம் தேதி நாங்கள் தூக்கிலிடப்படவுள்ளதாகவும் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளோம். இது ஆயுள் தண்டனை காலத்தை விட அதிகம். மேலும் தண்டனை காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தனிமை சிறையில் வாடியுள்ளோம். இவ்வளவு நீண்ட காலம் வாடிய பிறகும் கூட, எங்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது ஒரு குற்றத்திற்கு இரண்டு முறை தண்டனை அளிப்பதாகும். இது சட்டவிரோதமானதும் கூட. மேலும் இது வாழ்வதற்குரிய சட்டரீதியிலான எங்களின் அடிப்படை உரிமையை பறிப்பதாகும்.
கருணை மனுக்களின் மீது உடனடியாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. கருணை மனுக்களின் மீதான முடிவுகள் தாமதமானதால் ஏராளமான தூக்கு தண்டனை உத்தரவுகளை சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டும் ரத்து செய்துள்ளன. இந்நிலையில், ஜனாதிபதிக்கு கருணை மனுவை அனுப்பி விட்டு அதன் முடிவு தெரியாமல் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்வோமா அல்லது சாவோமா என தெரியாமல் ஒவ்வொரு நாளும் நாங்கள் தனிமைச்சிறையில் தவித்த தவிப்பு, மரண தண்டனையை விடக்கொடுமையானது. எனவே 11 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் கருணை மனு மீது முடிவெடுக்காமல் காலதாமதம் செய்ததால், எங்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மூவரின் தூக்கை குறைக்க சட்டசபையில் தீர்மானம்: ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை குறைக்க தமிழக சட்டசபையில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை குறைக்கக்கோரும் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்தார். தூக்கு தண்டனை தமிழக மக்களை வருத்தப்பட வைப்பதாக உள்ளதாகவும், எனவேதமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இத்தீர்மானம் சட்டசபையில் ஏகமனதாக நிறைவேறியது. இத்தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
Thanks-Dinamalar

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|