பேச்சுக்களில் தீர்வு ஒன்று எட்டப்பட்டால் மட்டுமே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறுவது.


அரசுடன் நடத்தப்படும் பேச்சுக்களில் தீர்வு ஒன்று எட்டப்பட்டால் மட்டுமே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பரிசீலிக்கும் என்று தெரிவித்தார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். இனப்பிரச்சினைக்கு 6 மாத காலத்துக்குள் தீர்வைக் காணும் நோக்குடன் நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை அமைக்கும் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 31 உறுப்பினர்களைக் கொண்ட இந்தத் தெரிவுக் குழுவுக்கு எதிர்க் கட்சிகள் வரிசையில் இருந்து 12 பேர் நியமிக்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமது பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும்.

ஆனால், தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்களைக் கூட்டமைப்பு உடனடியாக நியமிக்கும் சாத்தியம் ஏதும் இல்லை என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அமைத்துள்ளதன் நோக்கம் காலத்தைக் கடத்துவதாகும். கடந்த ஜனவரி மாதம் முதல் எங்களுடன் பேசி வரும் அரசு உருப்படியாக தீர்வுத் திட்டம் எதனையும் முன்வைக்கவில்லை. ஆனால், தீர்வை எட்டுவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்பட உள்ளதாகத் திடீரெனச் செப்ரெம்பர் மாதத்தில் அரசு தெரிவித்தது. அரசின் யோசனையைக் கூட்டமைப்பு எதிர்த்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி சில முன்மொழிவுகளைத் தெரிவித்தார். கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சில் எட்டப்படும் தீர்வை நாடாளுமன்றில் சமர்ப்பித்து ஆராய்ந்து இறுதித் தீர்வை எட்டலாம் என்று தெரிவித்தார். ஆனால் பேச்சில் இதுவரை எந்த ஆக்கபூர்வமான முடிவுகளும் எட்டப்படவில்லை. அரசு வழங்கிய ஒருசில வாக்குறுதிகள்கூட நிறைவேற்றப்படவில்லை. இத்தகைய நிலையில் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படிப் பங்கேற்க முடியும்? பேச்சில் ஓர் ஆக்கபூர்வமான முடிவு எட்டப்பட்டால் மட்டுமே தெரிவிக்குழுவில் பங்கேற்பது குறித்து கூட்டமைப்புப் பரிசீலிக்கும் என்றார்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|