யாழ். பல்கலைக்கழகத்திற்குள் முகமூடிக் கொள்ளையர்கள்போல் நுழைந்த சிலர் சிற்றுண்டிச் சாலைக்கு அருகில் இருந்த விளம்பரப் பலகையின் கண்ணாடியை அடித்து நொருக்கினர். மாவீரர் தினத்தையொட்டிய நோட்டீஸ் ஒன்று அதற்குள் இருந்ததன் காரணமாகவே நொருக்கப்பட்டது என்று மாணவர்கள் கூறினர்.
“முன்புறம் கறுப்பு நிறக் கண்ணாடி கொண்ட தலைக் கவசங்கள் நீண்ட மழை அங்கி என்பவற்றை அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த நான்குபேர் திடீரென விளம்பரப் பலகையின் கண்ணாடியை அடித்து நொருக்கி அதற்குள் இருந்த நோட்டீஸை எடுத்துச் சென்றனர்” என்றனர் மாணவர்கள். இதுபோன்ற நோட்டீஸ்கள் பல்கலைக்கழகத்தின் வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்ததாகவும் ஆனால், அவற்றுக்கு எவரும் சேதம் விளைவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றமை பல்கலைக்கழகத்துக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதியில் புலிகளால் மாவீரர் வாரம், மாவீரர் தினம் என்பன கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. 2009 மே மாதம் அரச படையினரால் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து இந்தத் தினங்கள் வடக்கு கிழக்குப் பகுதியில் கடைப்பிடிக்கப்படுவதற்கு அரசும் இராணுவமும் தடை விதித்துள்ளன. எனினும் உலகில் தமிழர்கள் பரந்து வாழும் ஏனைய நாடுகளில் மாவீரர் வாரம் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. மாவீரர் தினத்தைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment