லண்டனில் நடைபெற்ற "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும்! சமகால அரசியல் ஆய்வரங்கும்!


"தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும், சமகால அரசியல் ஆய்வரங்கமும் பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் இந் நிகழ்வு வடமேற்கு லண்டன் WATFORD ROAD, NORTHWICK PARK, HARROW, MIDDLESEX, HA1 3TP எனும் முகவரியில் அமைந்துள்ள "WESTMINISTER UNIVERCITY " கலையரங்கில் நேற்று (18.12.2011) ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8:30 மணீவரை நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கத்தினைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு திரு.மோகன் அவர்கள் மலர்மாலை அணிவித்தார்.

தொடர்ந்து பொது மாவீரர்களுக்கான மலர் மாலையினை 1985 ஆம் ஆண்டு சிறீலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிய மாவீரரான ஜீவன் அவர்களின் சகோதரி திருமதி. சபாரட்ணம் அவர்கள் மலர்மாலையினை அணிவித்தார். தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்றது. மலர்வணக்க நிகழ்வு இடம்பெற்ற வேளை "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவுப்பாடலும், 2006 ஆம் ஆண்டு தாயகத்திலிருந்து வெளியான தமிழீழ கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் கவிதையும் ஒலிபரப்பப்பட்டது. பாலா அண்ணாவினது நினைவுசுமந்த நினைவுப் பேருரையினை திரு. மாறன் அவர்கள் வழங்கினார். அதன் தொடர்ச்சியாக சமகால அரசியல் ஆய்வரங்கம் இடம்பெற்றது.

அரசியல் ஆய்வரங்கினை தமிழ்த் தேசிய ஆர்வலரும், மூத்த ஊடகவியலாளருமான திரு. சிவா சின்னப்பொடி அவர்கள் தலைமையேற்று நடாத்தினார். இவ் அரசியல் ஆய்வரங்கில் " தாயகம், தேசியம் தன்னாட்சி உரிமை என்பதன் நீட்சியும், எமது இலட்சியமாம் தமிழீழ தேசம் மலரவேண்டும் என்பதன் தேவையும்" எனும் தலைப்பில் தமிழ் இளையோர் செயற்பாட்டாளரும், தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் செயற்குழு உறுப்பினருமான திரு. ஜெயந்தன் அவர்களும், "புலம்பெயர் தேச மக்கள் கட்டுமானங்களை எவ்வாறு எமது தாயக விடுதலைப் பயணத்தினை நோக்கி செயற்படுத்துவது" எனும் தலைப்பில் திரு.கோபித் அவர்களும், "மாவீரர்களின் தியாகமும், மக்களின் அர்ப்பணிப்புமே ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ள நிலையில் எமது கைகளில் தற்போதுள்ள ஆயுதம்" எனும் தலைப்பில் ஜேர்மனிலிருந்து வருகை தந்திருந்த தேசிய உணர்வாளர் திரு. ராஜேந்திரம் அவர்களும், "இலங்கைத் தீவில் தாயக விடுதலைப் பயணத்திற்காகவும் மக்களின் நல்வாழ்விற்காகவும் செயற்படுபவர்களுடனான தொடர்புகளை பேணுவதும், அவர்களுக்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதும்" எனும் தலைப்பில் அரசியல் ஆய்வாளர் திரு. காதர் அவர்களும், "எமது தேசவிடுதலைப் போராட்டமும், சர்வதேச சக்திகளை புரிந்துகொள்ளுதலும்" எனும் தலைப்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் முன்னாள் பொதுச்செயலாளரும், அரசியல் நோக்கரும், சட்டத்தரணியுமான திரு. ஜெயரட்ணராஜா அவர்களும் உரையாற்ரினர்.

தொடர்ந்து மேற்குறிப்பிட்டவர்களினது உரை தொடர்பாகவும், சமகாலத்தில் புலம்பெயர்வாழ் மக்களும், அமைப்புக்களும் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பாகவும் மக்களின் கருத்துக்களைப் பெறும் நோக்கோடு கருத்துப்பகிர்வுக்கான நேரம் வழங்கப்பட்டு மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டன. அத்தோடு நிறைவுபெற்ற ஆய்வரங்கத்தினைத் தொடர்ந்து இளையோர் செயற்பாட்டாளரும், தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் செயற்குழு உறுப்பினருமான திரு. கபில் அவர்கள் நன்றி உரையினை வழங்கினார். இந் நிகழ்வில் ஊடகவியலாளர்கள், அரசியல் நோக்கர்கள், தேச விடுதலை விரும்பிகள் என பலதரப்பட்ட மக்களும் கலந்துகொண்டிருந்தனர். புலம்பெயர் தேசத்தில் இவ்வாறான அரசியல் ஆய்வரங்கு நடைபெறுவது ஆரோக்கியமானது எனவும், வரவேற்கத்தக்கது எனவும், இந் நிகழ்வில் கலந்துகொண்ட நோக்கர்கள் கருத்துத் தெரிவித்தனர். மேலும் இவ்வாறான ஆய்வரங்குகள் எதிர்காலத்தில் பரந்துபட்டளவில் நடைபெற வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்தனர். இறுதியாக உறுதியேற்போடு நிகழ்வுகள் நிறைவுபெற்றது.








நன்றி தமிழ்வின்.

Stay Connected With Free Updates

செய்திகளை பெற-உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே பதிவு செய்க:

இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து

0 comments:

Post a Comment

 
© 2012 I tamil Web All Rights Reserved.
|