நாம் தமிழர் கட்சி சார்பில் கும்பகோணம் மகாமககுளம் மேல்கரையில் அம்பேத்காரின் 55-வது நினைவு நாள் வீர வணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழர்களுக்கு சொந்தமான தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்தோடு இணைக்கவேண்டும். முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்யவேண்டும், அம்பேத்கார் திரைப்படத்தினை வரி நீக்கி தமிழக அரசே திரையிடவேண்டும், இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசன் வரலாற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும், குடந்தை மோதிலால்தெருவிற்கு கதிர் தமிழ்வாணன் தெரு என்று பெயர் சூட்டவேண்டும், உடையாளூரில் ராஜராஜ சோழன் நினைவு மண்டபத்தை உடனே கட்ட வேண்டும், குடந்தை நகருக்கு வெளியே உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை நகருக்குள் உடன் கொண்டு வரவேண்டும், கடைகளில் உள்ள விளம்பர பலகைகளில் தமிழில் பெயரிடவேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசும்போது, ’’புரட்சியாளர் அம்பேத்காருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் அவர் கனவை நினைவாக்க இந்த கூட்டத்தை நடத்துகிறோம். அவர் நினைவு நாளை டிச.6-ந் தேதி உரிய நாளில் கொண்டாடக்கூட நமக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஜாதியால் தமிழினம் இன்று அடிமைப்பட்டு கிடக்கிறது. ஜாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது. சங்கம் வைத்து நம் முன்னோர்கள் தமிழை வளர்த்தார்கள். ஆனால் இன்று தமிழன் சங்கம் வைத்து சாதி சங்கத்தை வளர்த்து கொண்டிருக்கிறான். சங்கம், சங்கமாக பிரிந்து கிடந்தால் எதிரிகள் நம்மை அங்கம்,அங்கமாக வெட்டி வீழ்த்திவிடுவார்கள். வலிமையான தமிழ் தேசிய இனம் உருவாக வேண்டும். தமிழர்கள் ஜாதி, மதம் கடந்து ஒன்றுபட்டு அடிமை, வறுமை, தீண்டாமை ஆகிய 3 கொடுமைகளையும் விரட்டி அடிக்கவேண்டும். சமதர்மம் என்பது அனைவருக்கும் சமவாய்ப்பு உள்ளதாக இருக்கவேண்டும். கூடங்குளம் அணு உலை ஆபத்து இல்லை என்கிறார்கள்.
அணுகுண்டு வெடித்தால் ஆபத்தா, இல்லையா? கூடங்குளத்திற்கு தமிழகத்தில் ஆபத்தில்லை என்று சொல்லும் நாராயண சாமி, புதுச்சேரியில் அணு உலை கூடம் நியமிக்கத்தயாரா? 30 ஆயிரம் கோடி செலவு என்கிறார்கள்.
சேது திட்டம் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டது. அத்திட்டம் என்னவாயிற்று? சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு கொண்டு வருவதை அனைவரும் எதிர்க்கின்றனர். தமிழன் எங்கும் வாழ வழியில்லாமல் அடிமையாக இருக்கிறான். உலகத்தில் தமிழனுக்கு என்று நாடு இல்லாததுதான் அதற்கு காரணம். வீரம் செரிந்த ஆயுத போராட்டத்தை என் அண்ணன் பிரபாகரன் நடத்தினான். எங்களுக்கு ஆயுத போராட்டம் தேவையில்லை. அமைதியாக ஜனநாயக வழியில் சட்ட வழியில் விடுதலையை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம்.கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடக்கவில்லை எனில் உண்மையாக பல செயல்கள் நடந்தே தீரும்’’ என்று தெரிவித்தார்.
நன்றி சரிதம்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment