திருகோணமலைப் பகுதியில் இனந்தெரியாதோரால் வீதியில் போக்குவரத்துச் செய்வோர் மீது ஊசி ஏற்றப்படுவதாகவும் இச் சம்பவம் தொடர்பில் கேள்வியுற்றவர்கள் மத்தியில் பதற்ற நிலை தோன்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் காந்திநகர், திருகோணமலைப் பகுதியில் வீதியால் பயணித்துக் கொண்டிருந்தவர் மீது ஊசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் திருகோணமலை நகர்ப்பகுதியில் உள்ள பாலர் பாடசாலை ஆசிரியையொருவருக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபரொருவர் ஊசி மருந்து ஏற்றியதாகத் தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மழைக்கான உடை அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோராலேயே மேற்படி ஊசி ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று புதன்கிழமை காலை வீட்டிலிருந்து பாலர் பாடசாலைக்கு சென்று கொண்டிருக்கும் வழியில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட ஆசிரியை தெரிவித்தார். இவர் தற்போது திருகோணமலை அரச பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை பொலிஸார் தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
ஊசி மருந்து ஏற்றப்பட்ட ஆசிரியை அபிராமி பாலர் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் கே.சுமித்ரா(25), இல - 256.33 தில்லைநகர்,திருகோணமலை பகுதியைச்சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இவ்வாறு ஏற்றப்படும் ஊசியால் அப் பகுதியில் பதற்ற நிலை தோன்றியுள்ளது. அதாவது ஏற்றப்படும் ஊசியில் ஏதாவது தொற்று நோய்கள் பரவக் கூடிய கிருமிகளும் கலக்கப்பட்டுள்ளதா எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. திட்டமிட்ட இன அழிப்பினை இவ்வாறானதொரு வழிமுறையின் ஊடாக கையாண்டு தமிழ் மக்களை ஒழிக்கும் நடவடிக்கையிலோ அல்லது உயிரைக் காவு கொள்ளக் கூடிய நோய்களைப் பரப்பி அவர்களை நாளடைவில் அழிவடையச் செய்யும் ஒரு திட்டமிட்ட நயவஞ்சகச் செயலாகவும் இது அமைந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
நன்றி அதிர்வு.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment