லண்டனில் கேணல் கிட்டு, லெப்.கேனல் குட்டிசிறீ, கப்டன் பண்டிதர், மேயர் சோதியா, கேணல் சாள்ஸ் உட்பட இம்மாத காலப்பகுதியில் வீரச்சாவைத் தழுவிய அனைத்து மாவீரர்களுக்குமான நினைவு வணக்க நிகழ்வும் இடம்பெற்றது. நேற்று வடகிழக்கு லண்டன் ஈஸ்ட்ஹாம் ரவுண்ஹோல் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் "கரிகாலன் ஈற்றெடுப்பு" எனும் தேசியத் தலைவர் தொடர்பான கவிதைத் தொகுப்பு நூலும், "வல்லமை தரும் மாவீரம்" மனசெல்லாம் மாவீரம்" "மாவீரர் புகழ்" எனும் மூன்று இறுவெட்டுக்களும் வெளியிட்டுவைக்கப்பட்டன.
22.01.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் பொதுச்சுடரினை திருமதி.கணேஸ், மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.செல்வராஜா , ஆகியோர் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
கேணல் கிட்டு, லெப்.கேனல் குட்டிசிறீ உட்பட்ட 10 வீரமறவர்களின் திருவுருவப்படத்திற்கு கேனல் கிட்டு அவர்களின் சகோதரியின் மகன் திரு.பாஸ்கரன் அவர்கள் ஈகச்சுடரேற்றி வைக்க மாவீரரின் சகோதரனான திரு. செல்வராஜன் அவர்கள் மலர்மாலையினை அணிவித்தார்.
அடுத்து கப்டன் பண்டிதர், மேயர் சோதியா, கேணல் சாள்ஸ் ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு திரு.தூயவன் அவர்கள் ஈகச்சுடரேற்றி வைக்க திரு. யசோ அவர்கள் மலர்மாலையினை அணிவித்தார்.
தொடர்ந்து இம்மாத காலப்பகுதியில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கான நினைவுக் கல்லறைக்கு மாவீரரின் சகோதரன் திரு. ஜெயக்குமார் அவர்கள் ஈகச்சுடரேற்றி மலர்மாலையினை அணிவித்தார்.
அதைத் தொடர்ந்து மலர்வணக்கத்தினை முன்னாள் மூத்த பெண்போராளியான திருமதி. சீத்தா அவர்கள் ஆரம்பித்துவைக்க மக்கள் மாவீரர்களுக்கான மலர்வணக்கத்தினை செலுத்தினர்.
தென்மேற்கு லண்டன் (மிச்சம், மோர்டன், குறைடன், ரூட்டிங் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த) மாணவிகள் வழங்கிய மாவீரர் வணக்க நடனமும், வீணை இசை நிகழ்ச்சியும், கவிதை உட்பட எழுச்சி நடனமும் இடம்பெற்றன. அத்தோடு வடகிழக்கு லண்டன் மாணவிகள் வழங்கிய நடனம் ஒன்றும் இடம்பெற்றது.
அடுத்த நிகழ்வாக நீண்டகாலமாக தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிவருபவரும், கேனல் கிட்டு அவர்கள் லண்டனில் இருந்து செயற்பட்ட காலப்பகுதியில் அவரோடு இணைந்து செயற்பட்டவரும், அனுபவமுள்ள ஒரு ஆலோசகராகவும் திகழும் திரு. அருச்சுனா சிற்றம்பலம் அவர்களும், கேணல் கிட்டு அவர்களோடு எண்பதுகளில் செயற்பட்டவரும், முன்னாள் போராளியுமான திரு.தயாபரன் அவர்களும் நினைவுப் பேருரைகளை நிகழ்த்தினர்.
தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் நடாத்தப்பட்ட இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக தமிழக இளம் கவிஞர் திரு. அகரம் அமுதம் அவர்களின் "கரிகாலன் ஈற்றெடுப்பு" எனும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு சில மாதங்கள் முன்னராக தாயக இசைக்குழுவினது தயாரிப்பில் உருவான இறுதிப் படைப்பான "வல்லமை தரும் மாவீரம்" எனும் இறுவெட்டும், டென்மார்க், கனடா, லண்டன் ஆகிய நாடுகளில் உள்ள தமிழ் இளையோரினதும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் இளையோரினதும் படைப்பில் உருவான "மாவீரர் புகழ்" எனும் இறுவெட்டும், தாயக கவிஞர்களின் பாடல் வரிக்கு தனது இனியகுரலால் வளம் சேர்த்த தேனிசை செல்லப்பா அவர்களின் பாடல்களை மட்டும் கொண்ட "மனசெல்லாம் மாவீரம்" எனும் இறுவெட்டும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இதே நிகழ்வில் தேசிய நினைவெழுச்சி நாள் 2011 ற்கான வரவு செலவுக் கணக்கு விபரம் திரு.ஜெயந்தன் அவர்களால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து உறுதியேற்போடு இரவு 10:00 மணியளவில் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தன.
நிகழ்வு முடிந்த பின்னரும் மக்கள் மண்டபத்தில் நின்று மக்கள் கடந்த மாவீரர் நாள் (2011) கணக்கறிக்கையினை பார்வையிட்டதோடு தமிழ்த்தாய் நாட்காட்டி, மற்ரும் " கரிகாலன் ஈற்றெடுப்பு" நூல் உட்பட இறுவெட்டுக்களையும் மக்கள் வாங்கிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தமிழ்வின்.
இந்த செய்தி பற்றிய உங்கள் கருத்து
0 comments:
Post a Comment